டெல்லி: மருத்துவம் சார்ந்த எம்பிபிஎஸ் போன்ற படிப்புகளில் சேர இந்திய அளவில் நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நீட் இளங்கலை தேர்வு வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் 6 முதல் நீட் இளங்கலை நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு துவங்கியது.
மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 6 எனவும், தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதேநேரம், நடப்பு கல்வியாண்டு முதல் கூடுதலாக 20 நிமிடம் அளிக்கப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு தேர்வு நிறைவு பெறும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினத்துடன் தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிய இருந்தது. மாணவ மாணவிகளின் நலன் கருதி நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளங்கலை நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் வரும் 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு - அமைச்சர் பொன்முடி