சென்னை: சென்னை ஐஐடியில் எக்ஸ்கியூட்டிவ் எம்.பி.ஏ. பட்டப்படிப்பானது வேலை செய்யும் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெட்டிங், உலகளாவிய வர்த்தகம், சைபர் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளின் வெளிப்பாட்டை வழங்குகிறது.
இந்த இரண்டு ஆண்டுகள் பட்டப்படிப்பில், சென்னை ஐஐடியின் மேலாண்மை படிப்புகள் துறை, நேரடி வர்த்தகப் பிரச்சினைகளுக்கான மூன்று திட்டங்கள் உள்பட கடுமையான பயிற்சி சார்ந்த பாடத்திட்டங்களை வழங்குகிறது.
இந்த இஎம்பிஏ பாடத்திட்டம், டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய யுக்தி, தொழில் துறை 4.0 தொழில்நுட்பங்கள் போன்ற களங்களில் தொழில் தேவைகளுடன் ஒத்திசைவான அதிநவீன அறிவை வழங்கவுள்ளது.
அத்தோடு வழக்கமான பாடங்கள், தற்போதைய வணிகத்துக்கு முக்கியமான சமூக ஊடகம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெட்டிங், பல தளங்களின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய வர்த்தக மேலாண்மை ஆகியவற்றுக்கான வெளிப்பாடுகளையும் இந்தப் படிப்பு வழங்குகிறது.
சைபர் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் உள்பட இதர முக்கியமான பாடங்களும் இதில் அடங்கியுள்ளன. மேலும், மாணவர்கள் நவீன உற்பத்தி செயல்முறைகள் மற்றும் 3டி பிரிண்டிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்களையும் அறிந்து கொள்வர்.
இந்தப் படிப்பில் சேருவதற்கு செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் அக்டோபர் 19ஆம் தேதி வரையில் https://doms.iitm.ac.in/emba/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பின் முக்கிய அம்சங்கள்
1. ஆழமான செயல்பாடு மற்றும் பரந்த தொழில் துறை கள அறிவு,
2. பரந்த வணிக முடிவுகளின் ஒருங்கிணைந்த முன்னோக்கு,
3. உலகளாவிய வணிக அமைப்பிற்குப் பங்களிக்கும் தலைமைப் பண்புகள்
இந்தப் படிப்பு வார இறுதி நாள்களில் நேரடியாகவும், காணொலி முறையிலும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவாரம் விட்டு ஒருவாரம் வார இறுதி நாள்களில் நடைபெறும் வகுப்புகள் ஜனவரி 2022 இல் தொடங்கும்.
இந்தப் படிப்பில் சேருவதற்கு, ஏதாவது இளநிலைப் பட்டப்பிடிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும், குறைந்தது மூன்றாண்டுகள் தொழில் துறை அனுபவம் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு, நுழைவுத் தேர்வு, காணொலி மூலமான நேர்காணல் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின்