சென்னை: சென்னை ஐஐடியின் வேலைவாய்ப்புத் துறை ஆலோசகரும், பேராசிரியருமான சங்கர் ராம் நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அதில், "நடப்புக் கல்வியாண்டில் டிசம்பர் 1ஆம் தேதிமுதல் 10ஆம் தேதிவரை நடைபெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கு ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் முதற்கட்டமாக ஆயிரத்து 85 மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைக்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த மாணவர்களின் 73 விழுக்காட்டினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 60 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை கிடைத்தது.
இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மீதமுள்ள மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளை நடத்துவதால் அவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படும்போது தேர்வு நடத்துகின்றனர்.
கரோனா தொற்று காலத்திலும் அதிக வேலைவாய்ப்பு
சென்னை ஐஐடியில் உள்ள நான்கு முக்கியப் பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்று ஏறக்குறைய அதே அளவில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
சென்னை ஐஐடியில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதால் பொறியியல் துறையில் மாணவர்கள் திறன்மிக்கவர்களாக விளங்குகிறார்கள். அவர்களுக்குத் தேவையான திறன்களை வெளிப்படுத்தும் வகையில் எழுத்துத் திறன், திறனறிவு கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பொறியியல் படிப்பினைப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்து திறன்களை வளர்த்துக் கொண்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு சற்று தாமதமாக இருந்தாலும் பின்னர் கிடைக்கும். சென்னை ஐஐடியில் மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு அவர்கள் தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்வார்கள். தேவைப்படும் மாணவர்களுக்குத் துறைகள் மூலம் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
கரோனா தொற்று காலத்திலும் நிறுவனங்கள் வேலைக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்தார்கள். அதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டு நன்றாக உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு இரண்டு லட்சம் டாலரும், சராசரியாக 22 லட்சம் ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக விலக்கு