ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனறிவு தேர்வுகள், எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நடைபெறுவது வழக்கம். இத்தேர்வுகளுக்கான முதற்கட்ட பணிகள் ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களை, இத்தேர்வுப் பணிகளுக்கு அழைக்கும்போது சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை அனுப்ப மறுப்பதும், ஆசிரியர்கள் தாங்கள் மருத்துவ விடுப்பில் உள்ளோம் என கூறுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி தாமதமாகிறது. இதனை தவிர்க்க அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணிகளுக்கு அழைக்கும்போது, மறுக்காமல் இருக்க உத்தரவிட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனடிப்படையில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசுத் தேர்வுத் துறையால் தேர்வுப் பணிகளுக்கு அழைக்கும்போது அவர்களை உடனடியாக பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் விடுவிக்க வேண்டும்.
சொந்த வேலை, பிற பணிகளை காரணம் காட்டி அரசு தேர்வுத் துறையின் பணியை ரத்து செய்யக் கேட்பது அல்லது மாற்று ஏற்பாடு செய்யக்கோருவது போன்றவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். உடல்நலக் குறைவு காரணம் காட்டி, இந்த பணிக்கு செல்ல மறுப்பவர்கள் அல்லது விலக்கு கேட்பவர்கள், அரசுத் தேர்வுகள் பணி ஆணை பெறுவதற்கு முன்பே மருத்துவ விடுப்பில் இருந்திருக்க வேண்டும்.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனரின் பணி ஆணை பெற்ற பின்னர் தகுந்த உண்மையான மருத்துவ காரணங்கள் இன்றி மருத்துவ விடுப்பில் செல்வதை அனுமதிக்கக் கூடாது. அரசுத் தேர்வுத் துறையின் பணி என்பது தலையாய கடமை என்பதை உணர்ந்து இந்தப் பணிக்கு அழைக்கும்போது எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஆசிரியர்கள் வரவேண்டுமென கூறப்பட்டுள்ளது.