சென்னை: கொளத்தூர் திருப்பதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். முன்னாள் ராணுவ வீரர். தற்போது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி நாகஜோதி (40).
இத்தம்பதியினருக்குத் திருமணமாகி 16 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கின்றன. தம்பதிக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 12) வழக்கம்போல் நாகராஜ் வேலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் தனது மனைவி நாகஜோதியை அலைபேசியில் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் பலனில்லை.
பயந்துபோன நாகராஜ், தனது அண்டை வீட்டாரைத் தொடர்புகொண்டு, தனது மனைவியைச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற அண்டை வீட்டார் கார்த்திக், கதவைத் தட்டியும் நாகஜோதி திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் எழவே, ஜன்னல் வழியாக கார்த்திக் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது நாகஜோதி மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், சம்பவம் குறித்து நாகராஜுக்கும், கொளத்தூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கொளத்தூர் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவடியில் ராணுவ வீரர் தற்கொலை