மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 88வது பிறந்தநாளையொட்டி திராவிடர் கழகம் சார்பில் சமுகநீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பேராசிரியர் அருணண், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், 'கசனியன் போகவில்லை என்பதை போல் மீண்டும் ஒரு முறை பிரதமராக வந்துள்ளார். ஒரு நாளும் உங்களுடைய பிறந்தநாளை நாங்கள் கொண்டாட மாட்டோம். ஆனால் வி.பி.சிங் பிறந்தநாளை நாங்கள் கொண்டாடுவோம். வி.பி.சிங் ஆட்சி புரிந்தது கொஞ்ச காலம்தான் ஆனால் நாடு என்று ஒன்று உள்ள வரை அவர் நினைவில் இருப்பார். என்னைப் பொறுத்த வரையில் அத்வானி, வாஜ்பாய், மோடி எல்லாரும் ஒன்றுதான். தமிழ் வாழ்க என்று கூறும்போது நாடாளுமன்றம் நடுங்குகிறது' என அவர் கூறினார்.
இதன்பின்னர் பேசிய கி.வீரமணி, 'தம்முடைய இரண்டாவது பிறந்த மண்ணாகவே தமிழ்நாட்டை கருதியவர் வி.பி.சிங். மத்திய அரசுப்பணிகளில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாங்கும் சம்பள பணத்தில் காந்தி தெரிகிறாரோ இல்லையோ வி.பி.சிங்கும், பெரியாரும் அவர்களுக்கு தெரிய வேண்டும். நாங்கள் போராடுவது எங்கள் கழகத்துக்கோ கட்சிக்கோ இல்லை. பாஜகவிலிருக்கும் தமிழன், பிற்படுத்தப்பட்டவர் என அவர்களிடன்குடும்பத்துக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடி வருகிறோம். வி.பி.சிங் பிறந்த நாளில் சமூகநீதி சூளுரை ஏற்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து பேசிய பொன்முடி, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு பெரியார் தேவைப்படுகிற காலம் இது. பெரியார் பெயரை நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலிக்கச் செய்தவர் வி.பி.சிங். இது பெரியார், கலைஞர், அண்ணா மண் இங்கே ஒரு போதும் பாஜகவை காலூன்ற விடமாட்டோம். நெருக்கடி நாள் இன்று எனக் கூறும் அதே நாளில்தான் மண்டல் கமிஷன் இயற்றிய வி.பி.சிங்கின் பிறந்தநாளும் இங்கு கொண்டாடப்படுகிறது என்று பேசினார்.