Double Role DMK: சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (டிசம்பர் 29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக கொடுத்த தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல், எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் அதிமுக மீது ஏதேனும் புகார் வராதா? என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு வரும் புகார்களை பெரிய அளவில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக லுக் அவுட் நோட்டீஸ் போட வேண்டிய அவசியம் என்ன?.
மெத்தனத்தால் தொற்று அதிகரிப்பு
அதேபோல் தொடர்ந்து காவல்துறையில் புகாரளிக்கும் ஒருவரை பிடித்து, அவர் மூலமாக மீண்டும் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்க வைத்துள்ளனர். எத்தனையோ குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு ராஜேந்திர பாலாஜிக்கு தனிப்படை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?. ராஜேந்திர பாலாஜியை தேச துரோகி போன்று திமுக சித்தரிக்கிறது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் திமுக எடுத்து வரும் நடவடிக்கைக்கு எல்லாம் மீண்டும் அவர்கள் பதில் கூற வேண்டிய காலம் வரும். காலம் மாறி நாங்கள் காவல்துறையை இயக்கும் காலம் வரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்துமா என்பது சந்தேகம்தான்.
அரசு மெத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறாது. அதுமட்டுமின்றி 1989இல் ஆட்சியை கலைத்தது போல், மீண்டும் நடந்துவிட கூடாது என திமுகவிற்கு அச்சம் உள்ளது. பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவளித்து, திமுக இரட்டை வேடமிட்டு வருகிறது.
தேர்தல் சட்ட திருத்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்காமல் ஆதரவளித்துவிட்டு, மக்களவையில் எதிர்த்து குரல் கொடுப்பது போன்ற நாடகத்தை திமுக செய்கிறது. திராவிடன் பார்ட்டியாக இருந்த திமுக, பேமிலி பார்ட்டியாக மாறி உள்ளது. திமுகவில் முன்னாள் தலைவர்கள் எல்லோரும் அதிருப்தியில் உள்ளனர். குடும்ப சண்டையை தீர்ப்பதிலேயே ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். மக்களை காப்பாற்றுவதில் அவருக்கு ஆர்வம் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: 'செந்தில் பாலாஜியை எனக்குத் தெரியும், பட் அவருக்கு தான் என்ன தெரியாது' - ட்விஸ்ட் வைத்த மோசடிப் பெண்