சென்னை: தமிழ்நாடு உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19) நடைபெறும் நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், அதிமுக வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பாபு முருகவேல் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில், மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை குறித்து மனு அளித்துள்ளதாகவும், வாக்குப்பதிவு நாளில் திமுக தோல்வி பயம் காரணமாக, பல மாநகராட்சிகளில் குண்டர்கள், ரவுடிகள், சமூக விரோதிகளை இறக்குமதி செய்து வார்டுக்குள் பதுக்கிவைத்துள்ளதாகத் எச்சரித்தார்.
இது காவல் துறைக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்குச்சாவடியைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் திமுக செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
100 விழுக்காடு நியாயமான தேர்தல் நடைபெறுவதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், பெரும்பான்மையான வாக்குச்சாவடிகளைப் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக மாற்ற திமுக திட்டமிட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணும் நாளிலும் வேட்பாளர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
எஸ்.பி. வேலுமணி ஜனநாயகத்திற்காகப் போராடியதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றார், திமுக அராஜக வழியில் செயல்பட்டுவருவதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்குத் துணை ராணுவப் படை கட்டாயம் வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிசிடிவி கேமராக்களும் முழுமையான பாதுகாப்புடன் சீல்வைக்க வேண்டும் எனக் கூறிய அவர், தேர்தல் ஆணையம் சார்பு நிலையில் செயல்பட்டால் நீதிமன்றத்தில் பதில் கூற நேரிடும் எனவும் எச்சரிக்கைவிடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர்கள் மக்களிடம் தேர்தலுக்காகப் பொய் கூறிவருகிறார்கள் என்றும், தேர்தல் விதிமீறல்களில் அமைச்சர்கள் ஈடுபடுவது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும், அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: திமுகவை கண்டித்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா - வலுக்கட்டாயமாக கைதுசெய்த போலீஸ்