இந்திய மருத்துவக் கவுன்சில் அனைத்து மாநிலத்தில் உள்ள முதன்மைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அளிக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டிற்குத் தேவையான இடங்களை கூடுதலாக மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பினை மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்லூரியில் தற்போது 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதனை 125 இடங்களாக உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், முற்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே உள்ள 100 இடங்களில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும்.
மீதமுள்ள 15 விழுக்காடு இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அந்தக் கல்லூரியில் 250 இடங்கள் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும்.
2019-20ஆம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது குறித்து முடிவெடுத்து ஜுலை16க்குள் தெரிவிக்க வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்ககம் மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவப் படிப்பில் இடங்களை அதிகரிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
இது குறித்து உயர் கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவினை மத்திய அரசுக்கு அனுப்புவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 350 இடங்கள் உள்ளன. அதன்படி 10 விழுக்காடு அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முன்னேறிய வகுப்பினர்களுக்காக 350 இடங்கள் கூடுதலாக அதிகரிக்க வேண்டும்.
இந்திய மருத்துவக் கவுன்சில் தற்போது கூறியுள்ளது போல் 25 விழுக்காடு இடங்களை அதிகரித்தால் தமிழ்நாட்டில் ஆயிரம் மருத்துவப் படிப்பு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
ஆனால், இதற்குரிய செலவினங்கள் முழுவதையும் மாநில அரசு ஏற்க வேண்டுமெனவும், அடுத்த ஐந்து ஆண்டுக்குள் இந்த இடங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் ஒரு இடத்தினை உருவாக்குவதற்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாகும். இதன்படி கணக்கிட்டால் ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக மருத்துவக் கல்வித் துறைக்கு தேவைப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள முன்னேறிய வகுப்பினருக்காக 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்துவருகிறது. அவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்தால், தமிழ்நாட்டில் உள்ள பிற வகுப்பினரும் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை அதிகரித்து அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பார்கள்.
எனவே இது குறித்து அரசு பரிசீலனை செய்துவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு பதிலளிப்பது குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.