சென்னை: டெல்லியிலுள்ள ‘ப்ளூ கிராஸ் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம்; ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு முன்னுரை எழுதிய இளையராஜா, புத்தகத்தின் முன்னுரையில் பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும்; பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பல்வேறு தரப்பினர் இடையே ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இளையராஜாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியது. பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, எல்.முருகன், நடிகை குஷ்பூ, ஹெச். ராஜா போன்றவர்கள் இதற்கு ஆதரவாகவும், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் எதிராகவும் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். இளையராஜாவிடம் இந்த கருத்தை திரும்ப பெறக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது என்ன? இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பாக நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜா குறித்து விமர்சனம் செய்துள்ளார். மேடையில் பேசிய அவர், “வறுமை கோட்டிற்குக்கீழ் இருந்த நேரத்தில் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பணம், புகழ் வந்தவுடன் உயர் சாதியினர் என நினைத்துக்கொள்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்போது தான் இந்த விவகாரம் தணிந்திருக்கின்ற சூழலில் மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேச்சு சர்ச்சையினை ஏற்பட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மேடையில் இளையராஜா குறித்த விமர்சனத்திற்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கைதட்டிய சம்பவமும் பல்வேறு தரப்பினர் இடையே விமர்சனங்களை எழுப்பி வருகிறது. பெரியார் மேடையில் வைத்து சாதி குறித்து பேசியதற்கு கண்டனம் என திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதிய வன்மத்தோடு தனிநபர் தாக்குதலை இளையராஜா மீது தாக்கிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி - பா.இரஞ்சித்!