சென்னை: வேங்கைவயல் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக திட்டமிட்டு நீர் தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்திருப்பதாக கூறி ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இவ்வழக்கை கடந்த ஜனவரி 14ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதனையடுத்து திருச்சி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பால் பாண்டி தலைமையிலான போலீசார் நீர்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மலம் மாதிரியை அடிப்படையாக வைத்து விசாரணையை துவக்கினர். குறிப்பாக விசாரணையில் சந்தேகப்படும் படியாக இருந்ததாக காவலர் முரளிராஜா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி ஆய்வு செய்யப்பட்டது.
இவர்கள் மலம் கலப்பதற்கு முன்னதாக வாட்ஸ் அப் குருப்பில் இது குறித்து பேசியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதற்கு அடுத்த படியாக கலக்கப்பட்ட மலத்தினை அடிப்படையாக வைத்து 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் 13 பேர் மட்டுமே ஒத்துக்கொண்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒத்துக்கொள்ளாத 8 பேர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அதன் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லை என சிபிஐக்கு வழக்கை மாற்றக்கோரி நீதிமன்றத்தில் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனிடையே ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணாவை தமிழக அரசு நியமித்தது.
இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 156 நாட்களாகியும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக வேங்கைவயல் வழக்கை தாமதமாக விசாரணை செய்ததாகவும், மலம் கலந்தவர்களை பிடிப்பதை விடுத்து, மலம் கழித்தவர்களையே காவல்துறை தேடி வருவது நீர்த்துப் போக செய்யும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே போல டி.என்.ஏ பரிசோதனை மற்றும் குரல் மாதிரி பரிசோதனை என சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டாலும், இதை வைத்து குற்றவாளியை நெருங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் கேட்டப்போது, இதுவரை இவ்வழக்கில் 153 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாகவும், சந்தேகப்படும் நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை மற்றும் குரல் மாதிரி பதிவு எடுத்திருப்பதாகவும், டி.என்.ஏ பரிசோதனைக்கு ஒத்துக்கொள்ளாத 8 நபர்களிடம், பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
டி.என்.ஏ மற்றும் குரல் மாதிரி பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே அதை வைத்து அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார். வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்த அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகி இளமுருகுவிடம் பேசிய போது, தூக்கி வீசப்பட்ட ஏதோ ஒரு மலத்தினை அடிப்படையாக வைத்து சிபிசிஐடி போலீசார் டி.என்.ஏ மற்றும் குரல் மாதிரி பரிசோதனை நடத்துவது என்பது இவ்வழக்கை நீர்த்துப்போக செய்வதற்காகவும், பொழுது போக்குக்காக செய்கிற வேலை எனவும் மற்றவரின் மலத்தை குற்றவாளி நீர் தேக்க தொட்டியில் கலந்திருக்க வாய்ப்பிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: குறைகளைக் கூறிய அதிமுக.. கொள்ளை அடிப்பதாக திமுக குற்றச்சாட்டு.. சூடான சென்னை மாமன்றம்