சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை - நள்ளிரவு முதல் அமல்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அனைத்து பாஸ்டேக் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் புதிய தொழில்கொள்கைகள் இன்று வெளியீடு
தமிழ்நாட்டின் புதிய தொழில் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கொள்கைகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். இதில், 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் மதிப்பில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்கான விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மாநில அரசின் தொழில்துறை சார்பில் நடக்கிறது.
ப. சிதம்பரம் வெற்றி செல்லுமா? இன்று தீர்ப்பு
சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தலில் (2009) முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் இன்று (பிப். 16) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தியாவின் வளரும் நட்சத்திரம் மயாங்க் அகர்வால்
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரரான மயாங்க் அகர்வால் பிறந்தநாள் இன்று (பிப். 16). 2018 டிசம்பர் 16ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார். அறிமுகமான முதல் இன்னிங்சில் 76 ரன்களைக் குவித்தார். 2017-18 ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த மயாங்க் அகர்வாலுக்கு பிசிசிஐ மாதவராவ் சிந்தியா விருது வழங்கி கவுரவித்தது.
இந்திய சினிமாவின் தந்தை இறந்த தினம்
இந்தியத் திரைப்படத் துறையின் முன்னோடி தாதா சாகேப் பால்கே இறந்த தினம் (1944) இன்று (பிப்.16). தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்தியத் திரைப்படத் துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். முதலில் வண்ண படங்கள், ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாய் வந்தன.