சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் தொடர்பாக அதிமுகவில் நிலவிக் கொண்டிருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பினரும் முயற்சி செய்தனர். அதில் இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்-க்கு, "பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் பெற்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என இடைக்கால உத்தரவு கிடைத்தது.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்கான பணிகளில் ஈபிஎஸ் தரப்பு இறங்கியது. அவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என ஓபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இன்று காலையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க டெல்லி சென்றனர்.
இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான இரட்டை இலை சின்னத்திற்கான படிவம் ஏ மற்றும் பி-யில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்தை அங்கீகரிக்கக் கோரி தேர்தல் அலுவலர் சிவக்குமாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தனர்.
தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வோம் என்ற ஓபிஎஸ் தரப்பின் கருத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதம் மூலம் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் உறுதியாகியுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை இறுதி நாள் என்பதால் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதையும் படிங்க: Erode East By election: அதிமுகவில் நடப்பது என்ன?