சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் நேற்று (செப் 8) தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஓ. பன்னீர்செல்வம், மனம் திருந்தி வந்தாலும் அதிமுகவில் இனி அவருக்கு இடமில்லை என எடப்பாடு பழனிசாமி உறுதிப்பட தெரிவித்து இருந்தார். மேலும், சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் எந்த காலத்திலும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது அதிரடியை தொடங்கியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவிற்கு, உயர் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுப்பதற்கு அனுமதி வழங்கினால், நாங்கள் பாதுகாப்பு வழங்குகின்றோம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![AIADMK eps ops edappadi palaniswamy o panneerselvam ஈபிஎஸ் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் அதிமுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16325475_opseps.jpg)
பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஈடுபட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்வதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரம் நீதிமன்றங்களில் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மற்றொருபுறம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ பன்னீர்செல்வாம் தரப்பு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது.
![AIADMK eps ops edappadi palaniswamy o panneerselvam ஈபிஎஸ் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் அதிமுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16325475_opsep.jpg)
உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு எப்படி வந்தாலும் இறுதி முடிவு இந்திய தேர்தல் ஆணையத்தில் தான் இருக்கிறது என டெல்லி மேலிடம் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் சுற்றுப்பயணம் மூலம் மக்களை சந்தித்து தனது ஆதரவை பெருக்கிக் கொள்ளுமாறு ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு கூறப்பட்டுள்ளது. இதனால் சட்ட ரீதியான நடவடிக்கையில் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொருபுறம் மக்கள் சந்திப்பு மூலம் பாய தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
![AIADMK eps ops edappadi palaniswamy o panneerselvam ஈபிஎஸ் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் அதிமுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16325475_opep.jpg)
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்களுக்கு சாதகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி விரைவில் நிரந்தர பொதுச் செயலாளராக வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி இரு தரப்பும் தங்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மூலம், அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்