சென்னை: 2021-22 கல்வியாண்டில் பி.இ, பிடெக் பாடப்பிரிவில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு, 440 பொறியியல் கல்லூரிகள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு நேற்று (செப்.14) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பெறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 51 உதவி மையங்களில் நடைபெற்று வருகிறது.
15 ஆயிரத்து 660 அரசுப் பள்ளி மாணவர்கள்
முதல் கட்டமாக அரசுப்பள்ளியில் படித்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (செப்.15) தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளியில் படித்த 15 ஆயிரத்து 660 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் விளையாட்டு பிரிவில் 48 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் நான்கு மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 20 பேருக்கும், இவர்களுடன் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் இன்று கலந்தாய்வு நடக்கிறது.
7.5% இட ஒதுக்கீடு - மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 13 மாணவர்கள் கலந்தாய்விற்காக நேரடியாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். கலந்தாய்விற்கு வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் முதல்முறையாக 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திருப்பது மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.
இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நேரடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் செப்.18 ஆம் தேதி வழங்குகிறார்.
இதையும் படிங்க: '5 கட்டமாக பொறியியல் கலந்தாய்வு' - அமைச்சர் பொன்முடி