திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
மேலும, மூடப்படாத, அல்லது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற கட்டுமான சங்க பொறியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆலோசனை வழங்குவார்கள் என்று அறிவிப்பு வெளியானது. ஆலோசனை வழங்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து கட்டுமானப் பொறியாளர்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இக்கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராகவன் பேசினார்.
அதில், "தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கான வழிவகை செய்வதுடன் அதனை மழைநீர் சேமிக்கும் இடமாக மாற்ற முன்வந்துள்ளோம். இதற்காக தமிழ்நாடு முழுவதுமுள்ள எங்களது சங்க உறுப்பினர்கள் 18 ஆயிரம் பேர் இலவசமாக ஆலோசனைகள் கூறத் தயாராக உள்ளனர். இப்பணிகள் குறித்து பொதுமக்கள் எங்களை எளிதில் தொடர்புகொள்ள "FACEAT&P" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளலாம். இதனால், குழந்தைகளின் இறப்புகளைத் தடுக்க முடியும்" எனக் கூறினார்.