சென்னை : தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது.
அப்போது அவர்கள் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததன் அடிப்படையில் சுமார் 12 கோடி ரூபாய் வாங்கி இருப்பு முடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2.33 கோடி ரூபாய் ரொக்க பணமும், ஒரு கிலோ தங்கம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும், சென்னை தி. நகர் சரவணா தெருவில் உள்ள விஜய் அப்பார்ட்மெண்டில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பவர் வீட்டில் இன்று காலை 5 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது அவர்கள் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த சோதனைக்கான முழு விவரங்கள் இதுவரை அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை!