சென்னை: வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு மீது 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், வழக்கை அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, வழக்கில் இருந்து விடுவிக்க, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி 3 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படி பணத்தைக் கொடுத்த போது வருமானவரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாகக் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரியின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டம் அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் இடம் புகார் அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை மாவட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை மாவட்டம் தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ்பாபு மற்றும் அங்கித் திவாரியைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கித் திவாரியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது..!