அதிமுக சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்காகத் தினகரன் சார்பில் டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர், டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
குறிப்பாக, சுகேஷ் சந்திரசேகர் மீது 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் ஐபோன் மூலமாக பல ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதாக டெல்லி தொழிலதிபர்களிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், சுகேஷ் சந்திரசேகருக்கு வெளியில் இருந்து உதவியதாக இருவரை கைது செய்தனர். சுகேஷ் சந்திரசேகரின் செல்போனையும் பறிமுதல் செய்து சைபர் ஆய்வக கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் , சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில், 16 அலுவலர்கள் கொண்ட டெல்லி அமலாக்கத் துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 7 நாட்களாக நடைபெற்ற சோதனையில், தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்ததாக 70 கோடி மதிப்பிலான 16 சொகுசு கார்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல், ஒரு லேப்டாப் மற்றும் கணக்கில் காட்டப்படாத 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வீட்டை சீல் வைத்தனர்.
மேலும் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர் துரைமுருகன் - ஓபிஎஸ்