சென்னை: 2008ஆம் ஆண்டு ஹாங் காங்கை தலைமை இடமாகக் கொண்ட Qnet என்ற நிறுவனம் இந்தியாவில் விஹான் டேரக்ட் செல்லிங்க் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் எம்எல்எம் என்ற முறைப்படி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வசூல் செய்து தங்கக்காசாக திருப்பி தருவதாக கூறி மோசடி செய்தது. இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பேரும் பணத்த கொடுத்து ஏமாற்றப்பட்டனர். மொத்தமாக 1,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்போது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் இருக்கின்ற காரணத்தினால் 2014ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணையை கையில் எடுத்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் Qnet எனப்படும் இந்த நிறுவனத்தின் மீது வழக்குகள் குவிந்தன.
இந்த விவகாரத்தில் பிரபல பில்லியர்ட்ஸ் சாம்பியன் மைக்கேல் ஃபெரேரா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் புஷ்பம் அப்பளநாயுடு, கே.பத்மா மற்றும் அகமது ஆகிய இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்தது.
அமலாக்கத்துறை 2017ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மற்றும் நிர்வாகிகளுக்கு தொடர்புள்ள 150 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. குறிப்பாகஸ சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள அசையா சொத்துக்கள் மற்றும் 5.3 கோடி பணம், 14 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட், பல்வேறு வங்கி கணக்குகளில் உள்ள 48 கோடி ரூபாய் முடக்கம், 27 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை கைப்பற்றியது.
கடந்த 14 வருடமாக பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்த மோசடி தொடர்பாக தற்போது அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் பத்மா வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான சொகுசு வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2008ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது முக்கிய தரகர் மற்றும் தொழிலதிபரான பத்மா உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 190 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினர். இதில் ரூ.50 கோடி ரொக்கம், ரூ.90.5 கோடி பங்கு பத்திரங்கள், ரூ.35 கோடி அசையா சொத்துகள், ரூ.15 கோடி மதிப்புள்ள கார் போன்ற அசையும் சொத்துகள் அடங்கும்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரராக செயல்பட்ட பத்மா வீராச்சாமியிடம் சோதனையின் மூலம் பொது மக்களிடம் வசூல் செய்த பணத்தை மேலும் சொத்துக்களாகவும், வெளிநாட்டு முதலீடுகளாக எங்கு வைத்துள்ளார்கள் என்பது குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை வைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனை முடிவுக்கு பின் அதிகாரப்பூர்வமாக தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்