சென்னை: பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் பல்வேறு நகைக் கடைகள் மற்றும் நகைப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள கடைகளில் மொத்தமாக பழைய நகைகளை வாங்கி, அதனை உருக்கி புதிய நகைகள் செய்வது, தங்க கட்டிகள் வாங்கி நகைகள் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதிகளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைக் கடைகள், ஆபரண நகை வடிவம் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் அடிக்கடி வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், இந்தப் பகுதியில் உள்ள நகைக் கடைகளில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மோகன்லால் ஜுவல்லரி, எஸ்.எஸ் கோல்ட் நகைக் கடைகளிலும், இந்த கடைகளுக்கு தொடர்புடைய நகை பட்டறைகளிலும், சிறு சிறு நகைக் கடைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நகைக் கடைகளில் ஏற்கனவே வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் கணக்கில் வராத தங்கக் கட்டிகளை வாங்கி, புதிய நகைகளை செய்து விற்பனை செய்வதாகவும் அதனை கணக்கில் காட்டாமல் மறைப்பதாகவும், இதனால் வரி ஏய்ப்பு, வருவாய் இழப்பு ஏற்படுவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனையை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனைக்கான முழு விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?