கோவை: கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்டின். பல மாநிலங்களில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்திவருகிறார். இவர் கேரளாவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றிருந்தார்.
அப்படி கேரளாவில் சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தபோது, விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக கொச்சின் சிபிஐ, மார்டின் மீது வழக்குப்பதிவு செய்தது.
மொத்தம் ரூ. 277.59 கோடி சொத்துகள் முடக்கம்
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 2009 முதல் 2010ஆம் ஆண்டு வரை சிக்கிம் லாட்டரி சீட்டுகளை விற்பனைசெய்து மொத்தம் 910 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதில் கிடைத்த வருவாய் மூலமாக 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அசையா சொத்துகளை வாங்கி குவித்ததும் தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், 2019ஆம் ஆண்டு மார்டினுக்குச் சொந்தமான 258 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.
இந்நிலையில் மார்ட்டினுக்குச் சொந்தமான அசையா சொத்துகளான ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (future gaming and hotel services), டேவிசன் லேண்ட் அண்ட் டெவலப்மெண்ட் (Davison land and development) ஆகிய சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
இவற்றின் மதிப்பு 19.59 கோடி ரூபாய் என்பதும் அமலாக்கத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மார்டினுக்குச் சொந்தமான 277.59 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஷால் பிலிம் பேக்டரி ஊழியருக்கு எதிரான வழக்கு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு