சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு குற்றச் சம்பவங்கள், சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க தனிப்பிரிவு ஒன்று தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது.
இந்தத் தனிப்பிரிவில் சென்னை புறநகரின் சிறப்புப்படை அலுவலராக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவரது தலைமையிலான சிறப்புப்படை தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
திருவண்ணாமலை காவல் கூடுதல் கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய வெள்ளதுரை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வடதமிழ்நாட்டை கலக்கிவந்த முக்கிய ரவுடிகளான வீரமணி, பங்க் குமார் உள்பட பல ரவுடிகளை என்கவுன்டர் செய்தவர் வெள்ளதுரை. மேலும் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் வெள்ளதுரை இடம்பெற்றிருந்தார். இதனால் இவருக்கு இரட்டை புரமோஷன் கிடைத்தது.
எஸ்ஐ ஆல்வின் சுதனை கொலைசெய்த ரவுடிகளை வெள்ளதுரை என்கவுன்டர் செய்தார். அதன் பிறகே வெள்ளதுரைக்கு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர் கிடைத்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெள்ளதுரையின் மனைவி அமமுக வேட்பாளராக மனு தாக்கல்செய்ததால் அப்போது காத்திருப்போர் பட்டியலுக்கு வெள்ளதுரை மாற்றப்பட்டார். மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகள் வெள்ளதுரை மீது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளரைத் தாக்கிய வட மாநில இளைஞர் மீது வழக்குப்பதிவு