சென்னை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலையொட்டிய பவானி ஆற்றுப்படுகையில் வருகிற 8ஆம் தேதி தொடங்கி 48 நாள்கள் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில், பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள், திருமடங்களுக்கு சொந்தமான யானைகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச திருக்கோயில்களுக்கு சொந்தமான யானைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்துகொள்வதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, யானைகளை அழைத்துச் செல்லும் வழியில் மின்சார ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை முன்கூட்டியே அறிந்து யானைகளை மிகவும் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து வர வேண்டும்.
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு செல்லும் யானைகள் அனைத்தும் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து முகாம் தூரத்தினை அனுசரித்து அதற்கேற்றாற்போல் புறப்பட்டு 7ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர வேண்டும்.
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ளும் யானைகள் தனது இருப்பிடத்திலிருந்து முகாம் நடைபெறும் இடம் வரை செல்லும் வழித்தட வரைபடத்தினை யானையுடன் செல்லும் திருக்கோயில் பணியாளர், பாகன் வசம் வைத்திருத்தல் வேண்டும்.
யானைகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து புறப்படும் நேரத்தையும், சென்று அடையும் நேரத்தையும் அலுவலர் மற்றும் பணியாளர்களின் தொலைபேசியினை தொடர்புக் கொண்டு அவ்வப்போது உள்ள நிலவரங்களை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.