தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை முழுவீச்சில் தொடக்கி அதன் பின் தேவைக்கேற்ப மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது சரியான நடவடிக்கையாக அமையும். ஆனால், பழமை வாய்ந்த தூத்துக்குடி, மேட்டூர் போன்ற இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களை நவீனப்படுத்த வாய்ப்புகள் இருந்தும், நவீனப்படுத்தாமல் அங்கு உற்பத்தியை நிறுத்தி தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால், மாநில மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்வாரிய சங்கத்தின் தலைவர்கள், இது போன்ற தவறான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை பணியாற்றி வரும் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களை பதவியிறக்கம் செய்வதும், பணியிட மாற்றமும் செய்து உத்தரவுகள் வெளியிடுகிறார். இப்போதுள்ள மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சாலால் புதிய உற்பத்தி திட்டங்களில் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன் ஊழலுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டிய பின்பும் வாரியம் நிர்வாகம் உணர மறுக்கிறது.
இதுவரை மின் வாரிய நிர்வாகத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்பார்கள். இது மின்வாரியத்தின் 63 ஆண்டு கால வளர்ச்சிக்கு உதவியது. ஆனால் தற்போது மின் வாரியத்தில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள 3 ஐஏஎஸ் அலுவலர்கள், அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள், மூத்த பொறியாளர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமலும், தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளையும் புறந்தள்ளி மின்வாரிய கட்டமைப்பைச் சீர்குலைத்து வருகிறார்கள்.
எனவே, மின்வாரியத்தின் கட்டமைப்பை சீர்குலைக்கும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், இணை மேலாண்மை இயக்குநர் வினித் ஆகியோரை மின்வாரியத்தின் நிர்வாகத்திலிருந்து இடமாற்றம் செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வேறு வழியின்றி கால வரையின்றி வேலை நிறுத்தத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் செல்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக் கட்டைகள் பறிமுதல்!