சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்பட்டுவருகிறது. விருப்ப மனு கட்டணத் தொகையாக தமிழ்நாட்டிற்கு 10ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
விருப்பமனு வாங்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் குவிந்துள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டுமென அமமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் விருப்ப மனு அளித்துள்ளார்.
மேலும், டிடிவி தினகரன் தங்கள் தொகுதியில் போட்டியிடவேண்டும் என ஏராளமான கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் பழனியப்பன், "கட்சித் தொண்டர்கள் திரளாக திரண்டுவந்து ஆர்வமுடனும் விருப்ப மனுவை பெற்றுவருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன்.
பொதுச்செயலாளர் எந்தத் தொகுதியில் போட்டியிட சொல்கிறாரோ, அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிச்சயம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். எந்த எந்தத் தொகுதிகளில் யார் யார் போட்டியிடவேண்டும் என்பதை அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் முடிவு செய்வார்" என்றார்.
இதையும் படிங்க: அமமுகவை இணைப்பது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்- சி.டி. ரவி