சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்துவும், தளி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரனும், பவானிசாகர் தொகுதியில் பி.எல் சுந்தரமும், திருப்பூர் வடக்கு தொகுதியில் எம்.சுப்பிரமணியும், வால்பாறை தொகுதியில் ஆறுமுகமும், சிவகங்கை தொகுதியில் குணசேகரனும் போட்டியிடுகின்றனர். இந்த பட்டியலின்படி, ஆறில் ஐந்து தொகுதிகளில் அதிமுகவுடனும், ஒரு தொகுதியில் பாஜகவுடனும் நேரடியாக மோதுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இந்நிகழச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு பாஜக தமிழ்நாட்டில் நுழைய முயற்சிக்கிறது. ஆடு மாடுகளை விலை கொடுத்து வாங்குவதை போல் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றது. நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு எதிரான அரசியல் போரட்டம்.
திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை மிக சிறப்பான அறிக்கை. அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களது தேர்தல் அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும். திமுகவுடன் தொகுதி எண்ணிக்கை குறித்து கவலைப்படாமல் லட்சியத்தை கொள்கையாக வைத்துக்கொண்டு கூட்டணி அமைத்திருக்கிறோம்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தபோது ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் விதிமுறை படி இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடன் செல்ல வேண்டும். எனவே வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது" எனத் தெரிவித்தார்.