தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியான புது பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் காலையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது பேருந்து நிலையத்திற்குள் நடமாடிக் கொண்டிருந்த அவர் மீது அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கிக் கொண்டார்.
உடனே இதை பார்த்த அப்பகுதியினர் பேருந்தை நிறுத்தி அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த ஊர் காவலர் படையினர் அவரை மீட்டபோது அவரது இடது கை முழுவதும் நசுங்கி இருந்தது. தொடர்ந்து பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.