சென்னை: சென்னையின் வடபழனி பேருந்து நிலையப் பகுதி அருகே, சந்தேகத்திற்கிடமான வகையில் முதியவர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் தியாகராய நகர் துணை ஆணையரின் தனிப்படையினர், முதியவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது முதியவர் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவலர்கள், முதியவரை வடபழனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் முதியவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த லாரன்ஸ் (70) என்பதும், இவர் கடைகளின் ஷட்டரை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பவர் என்பதும் தெரியவந்தது.
சிறை விடுதலை - சென்னை பயணம்
லாரன்ஸ், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா சாலை, வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன், மீண்டும் தனது சொந்த ஊரான கேரளாவிற்குச் சென்று தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அங்கு காவல் துறையினரிடம் சிக்கிய லாரன்ஸ், கடந்த 5 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டு, ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்த லாரன்ஸ், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு மேன்சனில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
அதன் பிறகு வடபழனி 100அடி சாலையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றின் ஷட்டரை உடைத்து, ரூ. 5 ஆயிரத்து 500 பணத்தை திருடியுள்ளார். மேலும் வேப்பேரி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் என10க்கும் மேற்பட்ட இடங்களிலும் லாரன்ஸ் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சென்னையை தேர்ந்தெடுக்கும் கொள்ளையர்கள்
இதனைத் தொடர்ந்து லாரன்சை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடித்த பணத்தில் மீதம் இருந்த ரூ.ஆயிரத்து 200ஐ பறிமுதல் செய்தனர். வேறு எங்கெல்லாம் ஷட்டரை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது குறித்தும், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சமீப நாள்களாகவே குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் நபர்கள், மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக சென்னையை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன் ஒருவன், சிறைவாசத்திற்கு பின்னர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக, இதே பாணியில் சென்னையைத் தேர்ந்தெடுத்து கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பை அதிகரிக்க கோரிக்கை
பெரிய நகரங்களில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி கண்காணிப்பை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் கஞ்சா, கார் திருட்டு வழக்கில் ஈடுபட்டவர் கைது