ஊரடங்கின் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மாஞ்சா நூலால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி, அதிகமாக பட்டம் பறக்கக்கூடிய கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள உயரமான கோபுரங்களில் காவலர்கள் நின்று, தொலைநோக்கி மூலம் பட்டம் விடுபவர்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாஞ்சா பட்டம் விடக் கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் 100 இடங்களில் வைக்க்ப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், அதனை மீறி நேற்று (ஜூன் 6ஆம் தேதி) அயனாவரம் பகுதியில் பட்டம் விட்ட எட்டு நபர்களை தொலைநோக்கி மூலம் காவல் துறையினர் கண்காணித்து கைது செய்தனர். குறிப்பாக, அயனாவரத்தைச் சேர்ந்த ஜானகி ராமன் (25), முகமது (34), குப்புசாமி (31) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சிய ஐந்து பேர் சாதாரண நூலில் பட்டம் விட்டதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர்கள் - உதவிக்கரம் நீட்டிய நடிகர்!