சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (நவ.29) காலை முதல் சென்னையில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மாலை நேரம் என்பதால் பணி முடிந்து வீடு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் பயணிக்கக் கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுபெற்றதன் காரணமாக, சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளும் வெள்ளக்காடாக நேற்று காட்சியளித்தது.
குறிப்பாக சென்னையில் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பிரதான சாலைகளிலே மழை நீர் தேங்கியதால், அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் குடியிருப்பு பகுதிகள், தாழ்வானப் பகுதிகள் மற்றும் மழை நீர் அதிகமாக தேங்கிய பகுதிகளில் உள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும்கூட, சென்னையில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளோ அல்லது மாநகராட்சி ஊழியர்களோ யாரும் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் ஜாஃபர்கான்பேட், அசோக் நகர், மேற்கு மாம்பலம், எழும்பூர், சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு அருங்காட்சியகம் மற்றும் கன்னிமாரா நூலகம் வளாகம் முழுவதும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.
கன்னிமாரா நூலகத்திற்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்லக்கூடிய மிக முக்கியமான நூலகமாக பார்க்கப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், அரசுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள் என பலர் வந்து செல்லக்கூடிய நூலகத்தில், தற்போது யாருமே உள்ளே செல்ல முடியாத சூழல் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர். முடிந்த வரையில் விரைவாக இங்கு தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.