சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையை நாடிய தாய் சேய்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு, 50 வயதாகிய ராதிகா திருமணமாகி 25 வருடங்கள் குழந்தை இன்றி தனியார் மருத்துவமனையில் ஐந்து லட்சத்திற்கும் மேல் செலவு செய்து செயற்கை முறையில் கருத்தரித்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும் ராதிகாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என உறுதி செய்யப்பட்டு ஏழு மாதம் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எட்டாம் மாதத்தின் தொடக்கத்தில் ராதிகாவிற்கு இரண்டு கால்களில் அதிக அளவு வீக்கமும், நெஞ்சில் நீரும் கோர்த்து தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அதிக செலவாகும் என்ற காரணத்தால் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். உடனே மருத்துவர்கள் பரிசோதித்து ராதிகாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர். மேலும் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்களை அழைத்து அவர்களின் ஆலோசனையும் பெற்று சிறந்த முறையில் சிகிச்சை அளித்தோம். அவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.
இதேபோல 47 வயதுடைய வள்ளிக்கு திருமணமாகி 17 வருடங்களாக குழந்தை இன்றி இருந்துள்ளார். பணம் சேர்த்து வைத்து தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த பின்னர் செயற்கை முறையில் கருத்தரிக்க சிகிச்சை மேற்கொண்டார். இதற்கு 5 லட்சம் வரை செலவானது. பிறகு ஏழு மாதம் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட அவர் எட்டாம் மாதத்தில் அவருக்கும் இரு கால்களில் வீக்கமும் ரத்தக் கொதிப்பும் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. பிறகு சிகிச்சைக்காக போதுமான பணம் இல்லாததால் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
ஸ்கேனில் வள்ளியின் குழந்தைக்கு இரத்தஓட்டம் சீராக இல்லை என்று அறிந்தவுடன் குழந்தையின் நுரையீரல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் மருந்து கொடுக்கப்பட்டது. பின் 32 வாரத்தில் குறைமாதக் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி பிரசவம் பார்த்த பின் தாயை தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இரண்டு குழந்தைகளையும் கடந்த ஒரு மாதமாக கண்ணாடித் தொட்டியில் வைத்து பராமரிக்கப்பட்டது. எழும்பூர் மருத்துவமனை பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் இதுவும் ஒன்று" என மருத்துவர்கள் பெருமிதம் கொண்டனர்.
இதையும் படிங்க: கிண்டி கிங்ஸ் முதியோர் மருத்துவமனை கட்டிட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய குழு அமைப்பு !