தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வரும் மே மாதம் மூன்றாம் தேதிமுதல் 21 வரை நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
மார்ச் 15ஆம் தேதி 500ஆக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில், தற்போது 3,500 ஆக அதிகரித்துள்ளது. தேர்வு நடைபெறும்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில் தேர்வை நடத்தலாமா? தேர்வை நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது.
இதில் கல்வித் துறை ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்ட பல உயர் அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்திற்குப் பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் பங்கேற்கக் கூடிய இந்தத் தேர்வு ரத்துசெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், அதே நேரத்தில் தள்ளிவைப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ’7ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரம்’ - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்