மதுரை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி மதுரை கோச்சடை பகுதியில் அவரது உருவப்படத்துக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது தவறானவர்களின் கையில் இரட்டை இலைச் சின்னம் சென்றுள்ளது. பழனிசாமியிடம் ஆட்சி, அதிகாரம் இருந்த போதே லட்சியத்துக்காக அமமுக உருவாக்கப்பட்டது. வியாபார நோக்கோடு லாபத்துக்காக எடப்பாடி பழனிசாமியுடன் சிலர் இருக்கின்றனர்.
துரோகிகளின் கையில் இரட்டை இலை இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்றது. பழனிசாமியின் வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் இருந்ததால் வந்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் இருந்தும் பழனிசாமியால் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. பழனிசாமியின் ஆணவமும், அகங்காரமும் தான் அதிமுகவின் அழிவுக்குக் காரணம். அதிமுகவை பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார்.
பழனிசாமிதான் பொதுச்செயலாளர் என அறிவித்தாலும், திமுகவை வீழ்த்த முடியாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால் மட்டுமே, திமுக என்ற தீய சக்தியை வெல்ல முடியும். பண பலமும், மூத்த நிர்வாகிகளும் உடனிருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெற முடியாது.
மெகா கூட்டணி என பழனிசாமி கூறிய நிலையில், தேமுதிக, பாமக வெளியேறிவிட்டது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5% அறிவித்து முறையாக நடைமுறைபடுத்த முடியாமல் அந்த மக்களை பழனிசாமி ஏமாற்றிவிட்டார். பாமக பழனிசாமியிடம் இருந்து நல்ல வேளையாக தப்பித்துவிட்டது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்சை நீக்கியதற்கு காரணம் ‘இது’தான்.. ஜெயக்குமார் ஓப்பன் டாக்!