சென்னை: 1972-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய பின்னர் அனகாபுதூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த அதிமுக என்னும் கட்சியில், "சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்" என்று எம்ஜிஆர் கூறி, பின்னர் அதை அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) என்று மாற்றம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
அதிமுகவின் முதல் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனே இருந்துள்ளார். அவருக்கு பின் பல்வேறு காரணங்களுக்காக தற்காலிகமாக பலரும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி வகித்துள்ளனர். எம்.ஜி.ஆர், இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், எஸ்.இராகவானந்தம், ஜெ.ஜெயலலிதா, வி.கே.சசிகலா(தற்காலிகம்) ஆகியோர் வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு பின்னர் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர்களில் ஜெயலலிதா தவிர்த்து பிறர் அனைவரும் தற்காலிகமாக சிறிது காலத்திற்கே பதவி வகித்துள்ளனர். அந்த வகையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூன்றாவது முழுநேர பொதுச்செயலாளர் மற்றும் ஏழாவது நபராக பொறுப்பேற்றுள்ளார்.
அதிமுக வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே நீண்ட காலம் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர் ஆவார். ஒரு நேர்க்காணல் ஒன்றில் உங்களுக்கு பிறகு அரசியல் வாரிசாக யாரை கை காட்ட நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது ஜெயலலிதாவின் பதில், "நான் எப்படி எனது திறமையால் வளர்ந்து வந்தேனோ அதுபோல் யார் திறமையால் வளர்கிறார்களோ அவர்கள் தான் பொறுப்புக்கு வர முடியும் வாரிசு என்று ஒன்று இல்லை" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.