சேலம்: ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தனி உதவியாளராக இருந்து வந்தார்.
இவர் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரிடம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மணி, இடைத்தரகர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
உறவினர் வீட்டில் ஒளிந்திருந்த இடைத்தரகர்
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதனையடுத்து, தலைமறைவான மணியை காவல்துறையினர் கடந்த மாதம் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே சேலம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையிலான தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) சேலம் கொண்டாலம்பட்டியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில் செல்வகுமார் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை காவலர்கள் செல்வகுமாரை இன்று (டிசம்பர் 25) காலை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பண மோசடி விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட, எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கணவரைக் கொன்று உடலை மறைத்த மனைவி - நடந்தது என்ன..?