சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர் பாபுவை ஆதரித்து ஏழுகிணறு பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமுமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, சேகர்பாபுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் பேசுகையில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமான தேர்தல்.
எனது அரசியல் வாழ்வு தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. குறிப்பாக 1967-70களில் முதல்முறையாக ஆட்சிக்கு வந்த திமுக தமிழுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அரசு. ஆனால், தற்போது மாநிலத்தில் உள்ள நிலை தலைகீழாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி சுயமாகச் செயல்படக்கூடிய சுயமாகச் சிந்திக்கக்கூடிய ஆட்சி அல்ல. இது ஒரு அடிமை ஆட்சி. இந்த ஆட்சியை ரிமோட் கன்ட்ரோல் மூலமாக மோடியும் அமித் ஷாவும் இயக்கிவருகிறார்கள். இந்த அடிமை ஆட்சி நமக்குத் தேவையில்லை.
அதிமுக அரசு மத்திய மோடி அரசின் அனைத்து மக்கள் விரோத கொள்கைகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதேபோல் தொழிலாளர்கள், உழவர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது.
பாஜக ஆட்சி செய்யக்கூடிய பல மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். மாட்டிறைச்சிக்குத் தடை, லவ் ஜிகாத் தடை என்ற பெயரில் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். எனவே பாஜக அரசின் பிளவுவாத கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக வரவில்லை. அதிமுக என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு வலம்வருகிறது.
பாஜக அதிமுக மூலமாக உயர்சாதி சனாதன கொள்கைகளைத் தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கிறது. இது தமிழ்நாட்டின் சமூக கலாசார பாரம்பரியத்திற்கு எதிரானது. 50 ஆண்டுகால திராவிட கலாசாரம், திராவிட பாரம்பரியம் ஊறியுள்ள தமிழ்நாட்டு மண்ணில் இதை நாம் அனுமதிக்க மாட்டோம். துறைமுகத்தில் நேரடியாகப் போட்டியிடும் பாஜக வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்து, பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும்" என்றார்.
இந்தப் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மூத்தப் பத்திரிகையாளர் இந்து என். ராம் உடனிருந்தார்.