சென்னை: தமிழகம் முழுவதும் 8 மணல் குவாரிகள் உரிமையாளர்களின் கணக்கில் வராத பணம் 12 கோடியே 82 லட்ச ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கையில், அரசு ஊழியர்கள் தொடர்பில் இருந்தார்களா என்ற கோணத்தில் அவருடன் தொடர்புடையவர்கள் இல்லங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை உள்ளிட்ட 34 இடங்களில், மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், மணல் குவாரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் 8 மணல் குவாரி தொடர்புடைய உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (செப்.12) தேதி சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் விடுதலை குறித்து எங்கள் கையில் ஏதுமில்லை” - அமைச்சர் ரகுபதி
அதனைத்தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் உள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை மேலாளர் விக்டர் நாகராஜன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்பொழுது, வீட்டில் யாரும் இல்லாததால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, அண்ணா நகர் பகுதியில் சண்முகராஜ் அண்ட் கோ என்கிற சார்ட்டர் அக்கவுண்டட் நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தங்கம், பணம் குறித்த விவரங்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கணக்கில் வராத 12 கோடியே 82 லட்ச ரூபாய் வங்கியில் உள்ள பணம் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கணக்கில் வராத 2 கோடியே 33 லட்ச ரூபாய் ரொக்கமும், சுமார் 56 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மணல் குவாரிகள் மூலம் கிடைக்கப்படும் வருவாய், கணக்கில் காட்டாமல் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்வதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதனால், அடுத்த கட்ட விசாரணைக்கு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கேரள பயிற்சி மருத்துவர் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சலால் உயிரிழப்பு!