சென்னை: தமிழ்நாட்டின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 13) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு பங்களாவில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் கரூரிலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
இதனையடுத்து இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வரை இந்த விசாரணை சென்றது. பின்னர், அது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பல்வேறு முறைகேடுகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, அரசு பார்களில் முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற புகார்களின் அடிப்படையில் ஒரு வார காலமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனையை செய்ததாக தகவல் வெளியானது.
இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தால், அந்த ஆவணங்கள் சிபிஐ அல்லது அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும், செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெறுகிறதா அல்லது வருமான வரித்துறை சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா என்பது சோதனையின் முடிவிலே தெரிய வரும்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு 7 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனைக்குப் பின்பு, மீண்டும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: IT Raids: கரூரில் 8 நாளாக நடந்த ஐடி ரெய்டு.. பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணம்!