சென்னை: அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ் பைனான்சியல் சர்வீஸ், எல்பின் உள்ளிட்ட நான்கு பெரிய நிதி நிறுவனங்கள் மீதான புலன் விசாரணை எந்த நிலையில் உள்ளது மற்றும் எவ்வளவு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி ஆசியம்மாள் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "25% வட்டி தருவதாக கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.2,438 கோடி வசூல் செய்து மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இயக்குனர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் நிறுவனத்தின் மேனேஜிங் இயக்குனர் உட்பட 3 பேர் வெளி நாடுகளில் பதுங்கி இருப்பதால் இவர்களை பிடிக்க ரெட் கார்னர் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வழக்கில் 5.69 கோடி ரூபாய் பணமும், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த 96 கோடி முடக்கம் செய்யப்பட்டு 97 சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனம் 15% வட்டி தருவதாக கூறி 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.4,400 கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர். மோசடி செய்த நிறுவனத்தின் 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் சௌந்தர்ராஜன் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலாண் இயக்குனர் அலெக்சாண்டர் மற்றும் இயக்குனர் மகாலட்சுமி ஆகியோரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிற இயக்குனர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு இந்த நிறுவனம் தொடர்புடைய 25 லட்சம் தங்க நகைகள் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.34 கோடி பணம் 80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.47 கோடி ரூபாய் முடக்கம் செய்து 45 கோடி மதிப்புள்ளாக அசையா சொத்துக்களை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிதி நிறுவனம் 84,000 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.5,900 கோடி மோசடி செய்தது தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்கு இயக்குனர்கள் மீது ரெட் கார்னர் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை நடத்தி 1.12 கோடி 34 லட்சம் மதிப்புள்ள நகைகளும் 16 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனம் தொடர்புடைய 791 வங்கி கணக்குகளின் இருந்து ரூ.121.54 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக எல்பின் நிதி நிறுவனம் 11 ஆயிரம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.962 கோடி மோசடி செய்தது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முக்கிய குற்றவாளி ராஜா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 400 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டு 139 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
மேலும் மோசடி செய்த பணத்தில் நிதி நிறுவனங்கள் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என பைனான்சியல் நிபுணர்களை வைத்து கண்டறிந்து பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஆர்.பி.ஐ விதிகளை மீறி புதிதாக தொடங்கக்கூடிய நிதி நிறுவனங்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி நிறுவனங்கள் மோசடி தொடர்பாக ஆள் பற்றாக்குறையினால் கூடுதலாக கேட்டு 28 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும், ஆருத்ரா மோசடி வழக்கின் ஆதாரங்களை பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிறுவன மோசடியில் சிக்கி பணத்தை இழந்தோருக்கு டி.ஆர்.ஓ மூலமாக பணம் கிடைக்கும் என அவர் கூறினார்.