பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசிய தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை, தமிழ்நாட்டில் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது.
ஆனால், இப்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளன. வேலை, தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக்கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.
கணவன் மனைவியை சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகளை சந்திக்க முடியாத நிலை என்று இதுபோன்று எண்ணற்ற உறவுகள், இ-பாஸ் முறையால் அவதிக்குள்ளாகும் குமுறல்கள் நமக்கு செய்தியாக வந்து சேர்கின்றன.
இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே, மக்கள் படும் சிரமத்தைக் கருதி, தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிலும் இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.