சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்த 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சூழலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இன்று தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இச்சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சட்டரீதியாக போராடுவோம் என இ- கேமிங் ஃபெடரேஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இ-கேமிங் ஃபெடரேஷன் செயலாளர் மலாய் குமார் சுக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி மற்றும் போக்கருக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சிக்கு ஏமாற்றமளிக்கும் நடவடிக்கை. இந்த சட்டத்தில், ரம்மி மற்றும் போக்கரை சூதாட்டம் என தவறாக வகைப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில், ரம்மி மற்றும் போக்கர் திறமை அடிப்படையிலான விளையாட்டு, சூதாட்டம் அல்ல என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ரம்மி மற்றும் போக்கர் திறமை அடிப்படையிலான விளையாட்டு (Games of skill) என கூறியுள்ளது.
திறமை அடிப்படையிலான விளையாட்டுகள் சூதாட்டத்திலிருந்து வேறுபட்டவை. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தில், ரம்மி மற்றும் போக்கரை சூதாட்டங்கள் எனக்கூறி தடை செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது.
அரசாங்கத்தின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஏற்க ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் தமிழ்நாடு அரசின் இந்த புதிய சட்டத்தை ஆராய்ந்து வருகிறோம், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Online rummy: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கடந்து வந்த பாதை!