சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்துவரும் மழையால் சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் இன்று (நவ.10) செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், "சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து கணக்கு எடுக்க உத்தரவிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 90 நீர் தேக்கங்களில், 53 நீர்தேக்கங்களில் 76% நீர் இருப்பு உள்ளது. மழை பொழிவு, நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறக்க அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
3 ஆயிரம் ஏரிகள் நிரம்பின
தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில் சுமார் 9 ஆயிரம் ஏரிகளில் 50% நீர் இருப்பு உள்ளது. 3 ஆயிரத்து 691 ஏரிகளில் 100% நீர் இருப்பு உள்ளது.
வங்க கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பி உள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
மழையால் 3 பேர் உயிரிழப்பு
நீச்சல் தெரிந்தவர்கள், மரம் அறுப்பவர்கள், பாம்பு பிடிப்பவர்கள், கால்நடை பாதுகாப்பாளர் என 1.5 லட்சம் பேர் தயார் நிலையில் உள்ளனர். கிருஷ்ணகிரி, திரூவாரூர், மதுரை மாவட்டங்களில் மழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 94 கால்நடைகள் இறந்துள்ளது. 950் குடிசை வீடுகள், கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.
சென்னையில் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 16 சுரங்கப்பாதையில் 15 இடங்களில் நீர் வெளியேற்றி விட்டோம். தேசிய மீட்பு படை, மாநில மீட்பு படை தயார் நிலையில் உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை மக்களே... கவனமாக இருங்க - அலர்ட் கொடுக்கும் தமிழ்நாடு வெதர்மேன்...