சென்னை தாம்பரம் கிஷ்கிந்தா அடுத்த சேமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஓலா ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் (27). இவர் இன்று தாம்பரத்திலிருந்து கொரட்டூருக்கு பயணியுடன் வந்துள்ளார். பயணியை இறக்கிவிட்ட பின் ஆவின் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கொரட்டூர் சிக்னல் அருகே மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஆட்டோவிலிருந்து சாலையில் விழுந்துள்ளார். அதனால் ஓட்டுனர் இல்லாமல் சென்ற ஆட்டோ சிறிது தூரம் சென்று நின்றது. அதனைப் பார்த்த பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொரட்டூர் காவல்துறையினர் சாலையில் இறந்து கிடந்த பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிரகாஷின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து உடற்கூறாய்வுக்குப்பின் அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சாலையில் வாகனம் இயக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுனர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.