சென்னை: டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் - சரஸ்வதி தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் மதுஅருந்திவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2003ஆம் ஆண்டு கணவரை விட்டுப் பிரிந்து சரஸ்வதி மூன்று மகன்களுடன் சூளைமேட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், மகன் திருமணத்திற்கு வந்த ஹரிகிருஷ்ணன், மனைவி சரஸ்வதியை சமாதானம் செய்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். ஆனாலும் தொடர்ந்து மதுஅருந்திவிட்டு வந்து மனைவியின் நடத்தையை குறை கூறி, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பூஜைப் பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்த சரஸ்வதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி ஹரிகிருஷ்ணன் தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஹரிகிருஷ்ணனுக்கு எதிராக டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கை இன்று (ஜூன் 21) விசாரித்த சென்னை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக், ஹரிகிருஷ்ணனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் மனைவியை இம்ப்ரஸ் பண்ண கணவன் செய்த செயல்.. கம்பி என்ன வைத்த கதை...