சென்னை: தி.நகர் பகுதியில் நேற்றிரவு(நவ.25) தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தததால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் மதுபோதையில், பறிமுதல் செய்த வாகனத்தை கேட்டு இருவரும் காவல்துறையினரிடம் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
பின்னர் இருசக்கர வாகனம் கிடைக்காத ஆத்திரத்தில் ஜி.என் செட்டி சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்துவிட்டு இருவரும் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கார் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் பாண்டி பஜார் காவல்துறையினர் கார் கண்ணாடிகளை உடைத்த ராகுல் மற்றும் தமீம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல் - நடந்தது என்ன?