சென்னை: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணாநகர் அண்ணா ஆர்ச் சந்திப்பில் 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதைப்பொருட்ளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். அதன் பிறகு போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், "தமிழகத்தில் கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார்.
அதற்கு 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O' என்று பெயரிடப்பட்டது. இதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதில் தீவிர நடவடிக்கை ஈடுபட்டுவருகின்றன மேலும் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது" என கூடுதல் காவல்துறை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 65,000 போதை மாத்திரைகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் விற்பனை செய்த நபர்களிடம் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருகின்றனர். இதற்காக ரயில்களில் போதை பொருள் ஏற்றி வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறிப்பாக பள்ளி,கல்லூரி அருகே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மூலமாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த அவர் ”தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக” மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் அப்போது தான் அது சாத்தியமாகும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க :போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்!