அமெரிக்காவுக்குச் சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் அனுப்பப்பட வேண்டிய கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அப்போது மதுரையிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு மருந்துப் பொருள்கள் என்று பதிவுசெய்யப்பட்ட 2 பாா்சல்கள் வந்திருந்தன.
அந்தப் பாா்சல்கள் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்படவே, அவற்றைத் தனியே எடுத்துவைத்து ஆய்வுசெய்தனா். அப்போது, அந்தப் பாா்சல்களை அனுப்பிய மதுரை முகவரி போலியானவை என்று தெரியவந்தது.
இதையடுத்து, பாா்சல்களை உடைத்துப் பாா்த்து சோதனையிட்டனா். அதனுள் ஆழ்ப்ரா ஜோலம், லோரா ஜீப்பன் என்ற வகை மாத்திரைகள் இருந்தன. இவை நமது நாட்டில் தடைசெய்யப்பட்டவை.
இந்த மாத்திரைகளை வலி நிவாரணியாகவும், தூக்கத்திற்கு மிகவும் அளவோடும் பயன்படுத்தலாம். ஆனால் இதனால் மாரடைப்பு உள்ளிட்ட மரணத்தை விளைவிக்கக்கூடிய விளைவுகள் ஏற்படும் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதை போதைக்காக ரகசியமாகப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அந்த வகை மாத்திரைகள் இந்தப் பார்சலில் 455 எண்ணிக்கையில் இருந்தன. இதன் சா்வதேச மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.
இதையடுத்து, சுங்கத் துறையினா் போதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய 455 போதை மாத்திரைகளையும் பறிமுதல்செய்தனா். அத்தோடு தொடா்ந்து விசாரணை நடத்தி மதுரையைச் சோ்ந்த மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியாளரான ஒருவரை கைதுசெய்துள்ளனா். அவரிடம் சுங்கத் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்திவருகின்றனா்.
இதையும் படிங்க:ஆன்லைன் மூலம் ரூ 2.55 லட்சம் திருட்டு