சென்னை: தமிழ்நாட்டில் ‘போதையில்லா தமிழகம்’ என்பதை முன்னிறுத்தி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், தனியார் அமைப்புடன் இணைந்து இரவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த இரவு மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 3,500 வீரர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் 21 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் என்ற மூன்று பிரிவுகளில் பங்கேற்று ஓடினர். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்க வந்த வீரர்களுக்காக, ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து போட்டியின் மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவடி காவல் ஆணையாளர், “போதை விழிப்புணர்வு பற்றி பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது.
ஆவடி காவல் மாவட்ட பகுதியில் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ENFORCEMENT போதை பொருள் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்களை கண்டறிந்து சோதனை மேற்கொள்ளுதல், அவர்களை கைது செய்தல், தற்போது நடைபெற்ற நிகழ்வுகள் போன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஏற்கனவே போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற மூன்று வழிமுறைகளைப் பின்பற்றி போதை தடுப்பு நடவடிக்கையை ஆவடி காவல் ஆணையரகம் செய்து வருகிறது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், காவலர் மாணவர்கள் மையங்களை அரசின் வழிகாட்டுதலின் படி மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். மேலும் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடைபெற்ற இரவு மாரத்தான் போட்டியானது, சென்னையில் முதல்முறையாக நடைபெற்ற போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை மேற்கு மண்டல காவலர்களுக்கான ‘கூடுவோம் கொண்டாடுவோம்’ சிறப்பு நிகழ்ச்சி