சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டை பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த மூலம் நிறைவேற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிறுவனமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. மேலும் மாணவர்களுக்கு பயிற்சிக்கான தங்குமிடம் உணவு உள்ளிட்ட செலவை தாட்கோவே ஏற்றுக்கொள்கிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு வேளாண்மைத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி வழங்கப்படள்ளது. இது குறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து நம்மிடம் பேசியவர், “தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சிகளை தாட்கோ எடுத்து வருகிறது. HCL நிறுவனங்கள் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி மூலமாக அவர்களுக்கு பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டம் மூலம் கல்வி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் சிறந்த நிறுவனங்கள் மூலமாக கேட்டரிங் பயிற்சி ஒரு வருட டிப்ளமோ, பட்டப்படிப்பு மூலமாகவும் கேட்டரிங் டெக்னாலஜி அவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு இன்னும் மூன்று வருடங்கள் கழித்து உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல்களில் வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
ட்ரோன் கருவி பயிற்சி: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, Centre for Aerospace Research மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சியினை அளிக்கவுள்ளது. வளர்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது.
இப்பயிற்சியின் முக்கிய நோக்கமே விவசாயிகளுக்கு தான்: விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக் கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை சம்பாதிக்கலாம்.
விவசாயப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பதால் விவசாயிகளுக்கு மூச்சுத் திணறல் நுரையீரல் பாதிப்பு போன்றவை தடுக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுகிறது.
பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100/- தாட்கோவால் வழங்கப்படும்: இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணாக்கர்களும், கல்வித் தகுதியில் பத்தாம் வகுப்பு/ஐடிஐ/டிப்ளமோ/ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். (இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் பத்து நாட்கள் அளிக்கப்படும்) பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61,100/- தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் DGCAஆல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். மேலும் இந்த பயிற்சியை பெற்ற நபர்கள் தமிழகத்திலும் வெளி மாநிலங்களில் சென்று கூட வேலை செய்து வருவாயை ஈட்டிக் கொள்ள முடியும்.
மேலும் விளைச்சல் சமயத்தில் மட்டுமே இவர்கள் தேவை இருப்பதால், பகுதி நேரமாகவும் இதனை செய்து சம்பாதிக்க ஒரு நல்வாய்ப்பாக இது அமைந்துள்ளது. மேலும் ஒரு சில மணி நேரங்களில் குறைந்தது 10 ஏக்கர் முதல் 40 ஏக்கர் வரை, ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கலாம்.
ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடன்: இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ ட்ரோன் கருவிகளை வாங்கலாம் மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மைத் துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும், அல்லது தாட்கோவின் ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க வழி வகை செய்யப்படும்.
இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம். மேலும் வணிக ரீதியில் தொடர்பு கொள்ளவும் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இவர்களுக்கென்று தனியாக மொழிபெயர்ப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் அவர்கள் வட மாநிலம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சென்று வேலை செய்யலாம்.
விமான போக்குவரத்துடன் ஒப்பந்தம்: விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களில், உள்ளிட்ட இடங்களில் எத்தனை வேலை வாய்ப்புகள் என்பதைக் கண்டறிந்து, இதற்காக பயிற்சியை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வண்ணமாக இது அமைந்துள்ளது. மேலும் இதற்காக ஒரு மாணவருக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதற்கான தொகையை தாட்கோவே செலுத்தும். மேலும் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதியை தாட்கோவே வழங்கும். மேலும் பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் 100% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் பயிற்சி நிறுவனங்களுக்கு, பயிற்சிகள் வழங்க ஒத்துக் கொள்கிறோம். வங்கிகள் மூலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள ஏழை எளிய, மாணவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றிருப்பார்கள். மேலும் படிக்க அவர்களிடம் வசதி இல்லாமல் இருக்கலாம், அவ்வாறு இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை, தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி அவர்களுடைய கனவை அடைய தாட்கோ வழிவகை செய்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவரை மீட்பதே நோக்கம்
பொருளாதாரத்தில் பின் தங்கியும், அடி மட்டத்தில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் தொழில் நேர்த்தி போன்றவற்றைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. தையல் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கான கடனும் வழங்கி, அவர்களை தொழில் முனைவோர்களாக தாட்கோ உருவாக்கி வருகிறது.
தையல் பயிற்சி பெற்ற பெண்கள் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 30ஆயிரம் சீருடைகள் தைத்து தரப்பட்டுள்ளது. TCS மற்றும் HCl ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. HCl மூலம் நான்கு வருட படிப்பில் மாணவர்களுக்கு பயிற்சிகளும் மற்றும் அவர்களுக்கு, மாத சிறப்பு ஊதியமும் வழங்கப்படுவதால், அந்த மாணவர்கள் பெற்றோரை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லாமல் உள்ளது. பயிற்சி முடித்த மாணவர்கள் அதே நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் அமர்த்தப்படுகிறார்கள்.
TCS மூலமாக, பல்வேறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியை நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் செவிலியர் படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் குறித்து கண்டறிவது பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனம் மூலம், பொறியியல் படித்த மாணவர்களுக்கு உலகத்தர வாய்ந்த பயிற்சிகள் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மற்றும் தற்போது உலகத்திற்கு எந்த டெக்னாலஜி உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் அவர்களை தயார் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இத்துறைக்கு மிகுந்த ஆதரவோடு, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் வருகின்ற மாணவர்களுக்கு அனைவருக்கும் இதன் மூலம் உதவ முடியும். மேலும் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை இத்துறைக்கு 751 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெயிட்டேஜ் மதிப்பெண்கள் இல்லை: TRB நடவடிக்கையால் அதிர்ச்சி!